”நான் தப்பி ஓடியவன் தான்.. ஆனால் திருடன் அல்ல. உண்மையில் ஏமாற்றப்பட்டவன் நான் தான்” என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா எழுப்பியிருக்கும் பரிதாபக் குரல் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றிருக்கிறது. அவரை விட அதிக அளவில் கடன் வாங்கி மோசடி செய்த அனில் அம்பானி இந்தியாவில் சுதந்திரமாகச் உலவும்போது விஜய் மல்லையாவுக்கு மட்டும் ஏன் ஓடி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது? இதன் பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.

கிங் ஃபிஷர் நிறுவனரும் பெரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு வங்கிகளிடம் தாம் வாங்கிய ரூ.11,000 கோடி மதிப்பிலான கடனைச் செலுத்த முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேறினார். கடந்த 9 ஆண்டுகளாக அவர் இந்தியா திரும்பாததால் ஓடி ஒளிந்து கொண்டவர் என்று சமூகத்தின் பார்வையிலும், பொருளாதாரக் குற்றவாளி என்று சட்டப்படியும் கருதப்படுகிறார். தற்போது லண்டனில் வசிக்கும் அவர், அண்மையில் ராஜ் ஷமானி என்ற யூடியூபருடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் தம் மீது இருக்கும் பலவிதமான கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு எவ்வளவு கடன் பாக்கி?

வங்கிகளிடமிருந்து மொத்தம் ரூ.11,000 கோடி கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா தப்பி ஓடியதாகத்தான் பரவலாகக் கருதப்படுகிறது. அந்த நேர்காணலில் அதற்கு விளக்கமளித்த மல்லையா, ”நான் வாங்கியது 11,000 கோடி. ஆனால், தற்போது கட்ட வேண்டிய கடன் பாக்கி ரூ.6,203 கோடி மட்டுமே” என்றார். ”ஆனால் அதற்காக வங்கிகள் எனது ரூ.14,000 கோடியை முடக்கி வைத்திருக்கின்றன. அதற்கான விவரங்களையும் என்னிடம் தர மறுக்கின்றன. இது பற்றி ஏற்கெனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்தியா வரவில்லை?

விஜய் மல்லையா வாங்கிய கடனைச் செலுத்த முடியாமல் இங்கிலாந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படும் நிலையில், “அது தப்பித்துப் போனது அல்ல. ஏற்கெனவே திட்டமிட்ட பயணம்தான்” என்று கூறியுள்ளார். “நான் இந்தியாவுக்குத் திரும்பாததற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முதன்மையானது, இந்தியா வந்தால் நான் மரியாதையுடன் நடத்தப்படுவேனா? என்ற சந்தேகம் இருக்கிறது” என்று அந்த நேர்காணலில் விஜய் மல்லையா கூறியுள்ளார். ”இந்தியாவில் நியாயமான விசாரணை நடத்தப்படும், நான் கண்ணியமாக நடத்தப்படுவேன் ஆகியவற்றுக்கான உத்தரவாதம் இருந்தால், நான் அதைப் பற்றி தீவிரமாக யோசிப்பேன்” என்று கூறியுள்ள விஜய் மல்லையா, தமது பணத்தை முடக்கி வைத்துள்ள வங்கிகளை எதிர்த்துச் சட்டப்போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக அதில் குறிப்பிட்டார்.

கிங் ஃபிஷர் ஊழியர்களிடம் மன்னிப்பு

”கடந்த 2008-ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடி உருவானது. அதில் இந்திய பணத்தில் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது. எனக்கும் உலக அளவில் பொருளாதாச் சிக்கல் ஏற்பட்டது. உடனே இதைப்பற்றி அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் ஆலோசனை மேற்கொண்டேன். கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தின் விமானங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று பேசினேன். அப்போது அவர் கூறிய வழிகாட்டுதல் படியே வங்கிகளிடமிருந்து கடன் பெற்றேன். ஆனாலும் என் பொருளாதார நெருக்கடி சரியாகவில்லை” என்று விஜய் மல்லையா விளக்கம் அளித்தார். அப்போது, “நான் என் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காக வைத்திருந்த ரூ.14,000 கோடியைத் தான் வங்கிகள் முடக்கி வைத்துள்ளன” என்றும், ஊழியர்களுக்கு முறையான ஊதியம் தர முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

விஜய் மல்லையா Vs அனில் அம்பானி

வங்கிகளிலிருந்து ரூ.6,203 கோடி திருப்பித் தர முடியாமல் போன விஜய் மல்லையாவைப் போலவே, அனில் அம்பானியும் கடனைத் திரும்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆனார். அவர் வாங்கிய தொகையோ ரூ.49,000 கோடி. ஆனாலும் விஜய் மல்லையாவைப் போல் அனில் அம்பானி மோசடிக் காரராகப் பார்க்கப்படவில்லை. இதைக் குறிப்பிட்டே தமது நேர்காணலில் விஜய் மல்லையா “என்னைத் தப்பி ஓடியவன் என்றுகூடச் சொல்லுங்கள், ஆனால் மோசடிக்காரன் என்று நினைக்காதீர்கள்” என்று பரிதாபமாகக் குறிப்பிட்டார். இதற்கு, பொருளாதார நெருக்கடியைச் சந்தித்ததும் இவர்கள் இருவரும் ஆற்றிய எதிர்வினையே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானது. அதற்காக அவர் வாங்கிய கடனில் அவரால் ரூ.455 கோடியை மட்டுமே திரும்பச் செலுத்த முடிந்தது. இன்னும் கொடுக்க வேண்டியது பெருந்தொகையாக இருந்தாலும், அம்பானி நாட்டை விட்டு வெளியேறவில்லை. புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகளை அனில் அம்பானி எதிர்கொண்டார். ஆனால் விஜய் மல்லையா இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். இதனால் விசாரணைகளுக்கு முறையாக ஆஜராகாத அவர், பொருளாதாரக் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டார். அவரை இங்கிலாந்திலிருந்து நாடு கடத்த வேண்டும் என்றெல்லாம் மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை உள்ளிட்டவை முயன்று வருகின்றன.

விஜய் மல்லையாவுக்கு பரிதாப அலை

இந்நிலையில், விஜய் மல்லையாவின் அண்மை நேர்காணல் சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. விஜய் மல்லையா வேண்டுமென்றே கடனைத் திருப்பித் தராமல் தப்பிச் சென்றார் என்பது போன்ற செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதைக் குறிப்பிட்டு, விஜய் மல்லையாவைவிட பல மடங்கு கடன் பாக்கி வைத்துள்ள அனில் அம்பானி மீது ஏன் இத்தகைய கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இதன் பின்னர் மத்திய அரசின் அரசியல் ஆதிக்கம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்கு பதிலாக ரூ.14,000 கோடியை முடக்கியுள்ள வங்கிகள், அம்பானி விவகாரத்தில் மட்டும் அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் நிகழும் பொருளாதாரக் குற்றங்களில் ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கப்படுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் செல்லும் அவரது நேர்காணல் காணொலிக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அவர் மீது பரிதாப அலையை ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version