பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்ட 81 பேர் அஸ்ஸாம் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 6 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உதவியதாக இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சமூக வலைத்தள கணக்குகள் கடும் தணிக்கைக்கு உள்ளாகின. டெல்லி, மகாராஷ்ட்ரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தேசவிரோத பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது தில்பர் உசேன் என்பவரை சோனிட்புர் போலீசார் கைது செய்துள்ளனர். ஹபிசுர் ரஹ்மான் என்பவரை காம்ரூப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சம்பந்தபட்ட பதிவுகள் குறித்தும், பாகிஸ்தானுடன் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இதுவரை தேசவிரோத பதிவுகள் தொடர்பாக மொத்தம் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது, நாட்டிற்கு எதிரான மனநிலையோடு யாரேனும் செயல்பட்டு வந்தால் தமது அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.