புதுவை பாண்டி மெரினா கடற்கரையில் விபரீதத்தை உணராமல் பேராசிரியை ஒருவர் அங்குள்ள பாறைகளின் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்று கால் சறுக்கி கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டிய பேராசிரியை ஒருவரே ரீல்ஸ் மோகத்தில் கடலில் பாறையில் சிக்கிய நிகழ்வு புதுவையில் நடைபெற்றுள்ளது.
பாறைகள் மீது ஏறி ரீல்ஸ்
மதுரையை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 26). இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
ஆனால் விபரீதத்தை உணராமல் அங்குள்ள பாறைகளின் மீது ஏறி வைஷ்ணவி செல்போனில் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென கால் சறுக்கி வைஷ்ணவி விழுந்தார். விழுந்த வேகத்தில் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
இதைக் கவனித்த வைஷ்ணவியின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை கை கொடுத்து தூக்க முயற்சித்துள்ளனர். ஆனால் வைஷ்ணவியின் கால் மற்றும் இடுப்பு பகுதி பாறையின் நடுவில் சிக்கிக் கொண்டது. இதனால் எவ்வளவு முயன்றும் மீட்க முடியவில்லை.
இதையடுத்து, வைஷ்ணவி ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாறையை கயிறு கட்டி அகற்றி அவரை மீட்க முயன்றனர். ஆனால் பாறை அரை டன்னுக்கு மேல் எடை இருந்ததால் மீட்க முடியவில்லை.
கிரேன் மூலம் மீட்பு
இதையடுத்து பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த பேரிடர் மீட்பு படையினர் கிரேன் உதவியுடன் பாறையை நகர்த்தி வைஷ்ணவியை மீட்டனர்.உடனடியாக சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வைஷ்ணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
