தமிழகத்தில் உள்ள நகராட்சி மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தை நிர்ணயித்து, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு ரூபாய் 500 ஆகவும், இதர பயன்பாட்டுக்கு ரூபாய் 1000 என சொத்து வரி பெயர் மாற்ற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகராட்சி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் இருக்கும் சொத்துகள் விற்பனை உள்ளிட்ட பரிமாற்றங்களின் போது சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் தனித்தனியே கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த நிலையில் இது தொடர்பான புகார்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதை அடுத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் ஒரே மாதிரி சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாக துறை கடந்த 16ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரான மதுசூதன ரெட்டி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில்,” மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்துவரி விதிப்புகளுக்கு பெயர் மாற்றக் கட்டணத்தினை அதாவது , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குடியிருப்பு பயன்பாடுகளுக்கு ரூ.500,ஆகவும் பிற பயன்பாடுகளுக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநகராட்சி / நகராட்சிகளும் மேற்கண்ட கட்டண விகிதத்தினை பின்பற்றி சொத்து வரி பெயர் மாற்றம் செய்திட ஏதுவாக திருத்தப்பட்ட சொத்துவரி பெயர் மாற்றக் கட்டணம் விகிதத்தினை மன்றத்தின் பதிவிற்கு வைத்து உடன் நடைமுறைப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இப்பெயர் மாற்றக் கட்டண விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்திலும் மற்றும் அலுவலக விளம்பரப்பலகையிலும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
தமிழக அரசு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 விதி எண்.256(3) (4) உட்பிரிவுகளில் சொத்து வரி பெயர்மாற்றம் மற்றும் கால வரையறை குறித்து விவரிக்கப்பட்டுள்ளதன்படி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், குடிநீர் கட்டண விதிப்பு எண்களுக்கு பெயர் மாற்றக் கட்டணம் எக்காரணம் கொண்டும் வசூலித்தல் கூடாது சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்படும் பொழுது சம்மந்தப்பட்ட சொத்து வரிவிதிப்பு எண்களுக்குரிய குடிநீர்க்கட்டணம் மற்றும் பாதாளச்சாக்கடை இணைப்பு கட்டணம் அறிவிப்பு எண்களையும் உரிய உரிமையாளரின் பெயருக்கு அதே விண்ணப்பத்தின் அடிப்படையில் உடன் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தினை இணைய வழியில் செலுத்தி பெயர் மாற்றம் செய்யும் வகையில் UTIS மென்பொருளில் உரிய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பாக பெறப்படும் மனுக்களை வெளிப்படைத்தன்மையுடன் மக்கள் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிர்ணயிக்கப்பட்ட பெயர் மாற்றக்கட்டணத்தினை மட்டும் வசூல் செய்து முடிவுற்ற அரையாண்டில் உள்ள மாநகராட்சி / நகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை பெற்று உடன் சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சி சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய காலக்கெடுவிற்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதனை கண்காணித்து, தற்போதுள்ள சொத்து வரி விதிப்பு எண்களுடன் குடிநீர் / பாதாள கட்டண / விதிப்பு எண்கள் பொறுத்திடும் பணிகளின் (Mapping) முன்னேற்றத்தினை துரிதப்படுத்திட மாநகராட்சி / நகராட்சி ஆணையர்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சிகளில் மேற்படி சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதனை உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது
