சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தின் தாம்னார் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீஸார் பலர் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஜிண்டால் பவர் லிமிடெட்டின் நிலக்கரி கையாளும் ஆலைக்குள் நேற்று (டிசம்பர் 27) மாலை ஒரு கும்பல் நுழைந்து, ஒரு கன்வேயர் பெல்ட், இரண்டு டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்களை எரித்ததுடன், அலுவலக வளாகத்தையும் சேதப்படுத்தியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதோடு, ஒரு போலீஸ் பேருந்து, ஒரு ஜீப் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை தீக்கிரையாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் நிலவியது. மேலும், பல அரசு வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
அப்போது சுமார் 300 போராட்டக்காரர்கள் சம்பவ இடத்தில் கூடியதாகவும், அவர்களில் சிலர் சாலையை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்ததால் அங்கே சுமார் 1,000 பேர் திரண்டனர். இந்தப் போராட்டம் பிற்பகல் 2.30 மணியளவில் வன்முறையாக மாறியது.
இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ், “இந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இது மாநில அரசின் பிடிவாதத்தின் காரணமாக ஏற்பட்டது. இந்த நிலக்கரிச் சுரங்கத்துக்காக கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினரை அவர்களின் காடுகள் மற்றும் நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அரசு வெளியேற்றி வருகிறது” என குற்றம் சாட்டினார்.
