புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகையினை தியாகப்பெருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடினார். 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையினை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றார்கள். இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணம் செல்வது, அதை இந்த பக்ரீத் பண்டிகையினையொட்டிதான் நிறைவேற்றப்படுகின்றது. மேலும் இறைத் தூதரானஇப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாகவும், மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தியாகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்தப் பண்டிகையினை தியாகப் பெருநாளாகவும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது.

புதுச்சேரியில் கடற்கரை சாலை, குத்பா பள்ளி, மீராப்பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 6.30 மணி முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையின்போது சகோதரத்துவம் தழைத்தோங்கவும், பெருமழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
சிறப்பு தொழுகையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version