ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்பவர்கள் கட்டண அடிப்படையில் தலையணை, போர்வை பெற்றுக் கொள்ளும் வசதி ஜன.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். விரைவான, பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு போன்ற காரணங்களால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விரைவு ரயில்களை பொருத்தவரை, ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே போர்வை, தலையணை வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் போர்வை, தலையணை வழங்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கட்டணம் செலுத்தி போர்வை, தலையணை பெற்றுக் கொள்ளும் வசதியை சென்னை கோட்டத்தில் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் இருந்து செல்லும் நீலகிரி, மங்களூரு, திருச்செந்தூர், சிலம்பு, திருவனந்தபுரம், ஆலப்புழா அதிவிரைவு ரயில்கள், மன்னார்குடி, பாலக்காடு, மங்களூரு விரைவு ரயில்கள், தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு ரயில் ஆகிய 10 ரயில்களில் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தலையணை மட்டும் பெற ரூ.30, போர்வை மட்டும் பெற ரூ.20, இரண்டையும் பெற ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பயணிகள் தங்களுக்கு தேவையானதை ரயில் பெட்டிகளில் உள்ள ஊழியர்களிடம் க்யூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். போர்வைகளை கொள்முதல் செய்வது, ரயிலில் ஏற்றி விநியோகம் செய்வது, தொடர்ந்து சுத்தம் செய்வது ஆகிய பணிகளை ரயில்வே ஒப்பந்ததாரர் மேற்கொள்வார். இந்த 10 ரயில்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியபோது, ‘‘சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 2023-24-ம் ஆண்டில் கட்டணமில்லா வருவாய் திட்டத்தின்கீழ் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியது. இதற்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால், ரயில்வே நிர்வாகம் இதை ஒரு நிரந்தர ‘கட்டணமில்லா வருவாய் திட்டமாக அறிமுகம் செய்கிறது. இதனால், பயணிகளின் வசதி மேம்படுத்தப்படும். ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதன்மூலம் ரயில்வேக்கு உரிமைக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.28.28 லட்சம் கிடைக்கும்’’ என்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version