சபரிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இதுவரை 65 பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளா மாநிலம் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் 18 மலைகள் புடை சூழ அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இதை சுற்றி எல்லாப் பாதைகளுமே காடுகளுக்குள் அமைந்துள்ளதால் பாம்பு, புலி, யானை போன்ற விலங்குகள் பக்தர்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால், வன விலங்குகளிடம் இருந்து ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பதில் வனத்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது.

மேலும், பெரிய வழிப்பாதையில் அவசர சிகிச்சை மையம், மருத்துவமனை என வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அழுதை முதல் பம்பை வரை குடிநீர், கழிவறை மற்றும் பக்தர்களுக்கு தங்கும் வசதி ஆகியவற்றை செய்து கொடுத்துள்ளது.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை, பாம்புகளில் இருந்து பாதுகாக்க 12 சான்றளிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக வனத்தை பற்றி நன்கறிந்த பழங்குடியினர் மற்றும் வனத்துறையை சேர்ந்த 60 நபர்கள் பாம்பு பிடிக்கும் குழுவில் உள்ளனர்.

இந்த குழுவினர், மண்டல – மகரவிளக்கு பூஜை காலத்திற்காக நடை திறக்கப்பட்ட நவம்பர் 16 ஆம் தேதி முதல் தற்போது வரை சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 65 பாம்புகளைப் பிடித்த வனத்துறையினர், அவற்றை அடர்ந்த வனத்திற்குள் விட்டுள்ளனர். அதில் 16 சேரை, 11 விரியன், 8 நாகப் பாம்புகள் அடங்கும். ஆகையால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக வருமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பம்பையில் இயங்கும் உதவி வனப் பாதுகாவலர் தலைமையிலான சிறப்பு கட்டுப்பாட்டு அறை மூலம், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் நடவடிக்கைகள் வனத்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version