ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஓமன் அணியை 17-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.

14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை தொடர், சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனான ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரியா, பங்களாதேஷ், பெல்ஜியம், கனடா, என மொத்தமாக 24 அணிகள் மோதி வருகின்றன.

இரண்டாம் நாளான நேற்று சென்னையில் 4 போட்டிகளும் மதுரையில் நான்கு போட்டிகளும் நடைபெற்றன. சென்னையில் இன்று துவங்கிய போட்டியில், பிரான்ஸ் – கொரியா, ஆஸ்திரேலியா – பங்களாதேஷ், சிலி-ஸ்விட்சர்லாந்து மற்றும் ஓமன் – இந்தியா அணிகள் மோதின.

சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஃபிரான்ஸ் அணி கொரியா அணியை எதிர்கொண்டது. இதில் 11-1 என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸ் அணி கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஃபிரான்ஸ் அணியின் வீரர் ஃப்லவுச் ஆர்த்தர் 3 கோல்களை அடித்து தமது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் சிலி – ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் 3-2 என்ற கோல்கணக்கில் சுவிட்சர்லாந்து அணி சிலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பின்னர் நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்தியா ஓமன் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி வந்த இந்திய அணி 17-0 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை படுதோல்வி அடையச் செய்தது.

இந்தப் போட்டியில், இந்திய ஹாக்கி வீரர்களான தில்ராஜ் சிங் 4 கோல்களையும், மன்மீத் சிங் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 3 கோல்களையும் அடித்து இந்திய அணியை சுலபமாக வெற்றியடைய செய்தனர். இந்த போட்டியில் சாதுரியமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த இந்திய வீரர் மன்மீத் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்ற இந்திய ஹாக்கி அணியின் B பிரிவின் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று நடைபெறக்கூடிய போட்டிகளில் ஜப்பான் – சீனா, நியூசிலாந்து – அர்ஜென்டினா, கொரியா – பங்களாதேஷ், மற்றும் ஆஸ்திரேலியா – ஃப்ரான்ஸ் அணிகள் மோத உள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version