டெல்லியில் வரும் மார்ச் 14-ம் தேதி பாஜகவின் மிக உயரிய முடிவெடுக்கும் அமைப்பான ‘ஆட்சிமன்றக் குழு’ கூட்டம் நடைபெற உள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை மையமாக வைத்தே இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்படவுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுடனான கூட்டணி சாத்தியக்கூறுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்டப் பட்டியலைத் தயாரிப்பது குறித்து மாநிலத் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான வானதி சீனிவாசன், தமிழக அரசியல் நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை இக்கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த 5 மாநிலத் தேர்தல்கள் பாஜகவிற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் கட்சியைப் பலப்படுத்துவது, தமிழகத்தில் கூட்டணியை உறுதி செய்வது எனப் பல முக்கிய முடிவுகள் மார்ச் 14 அன்று எடுக்கப்பட உள்ளன. இக்கூட்டத்திற்குப் பிறகு, முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்  குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், தேசிய அளவில் இக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version