நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 9) தொடங்கிய நிலையில், மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் விளக்கமளித்தார்.
ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்து இந்தியா மிகவும் விழிப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இதற்காக அமைச்சரவைக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேற்காசிய நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்ந்து வருவதால், அவர்களது பாதுகாப்புதான் இந்தியாவின் முதல் முன்னுரிமை என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேரமும் முழுமையாகச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தனது ஆதாரங்களைப் பன்முகப்படுத்தி வருவதாகவும் தற்போதைய சூழலில் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். “பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே இந்தப் பதற்றத்தைத் தணிக்க முடியும்” என்று இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், மேற்காசிய நாடுகள் விரைவில் பழைய அமைதியான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
