ஹரியானாவில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை “ஊடுருவல்காரர்களின் ஆட்சி” என்று விமர்சித்த ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுவதன் மூலமே பாஜக வெற்றி பெறுவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பதிவு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தனது சமூக வலைதளப் பதிவில் ராகுல் காந்தி கூறுகையில், “மக்களவையில் உள்ள 240 பாஜக எம்.பி-க்களில், ஆறில் ஒரு பங்கு எம்.பி-க்கள் வாக்குத் திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்கள். அவர்களை பாஜகவின் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால் ‘ஊடுருவல்காரர்கள்’ என்றுதான் அழைக்க வேண்டும். ஹரியானாவைப் பொறுத்தவரை அங்குள்ள முழு அரசாங்கமுமே ஒரு ஊடுருவல் ஆட்சிதான். நியாயமான முறையில் தேர்தல் நடந்தால் பாஜகவால் 140 இடங்களைக் கூடத் தாண்ட முடியாது” என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், மம்தா பானர்ஜியின் கருத்தை வழிமொழிவதாகக் கூறினார். “மேற்கு வங்கத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக திருடியுள்ளது. அசாம் மற்றும் வங்காளத்தில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதே போன்ற முறைகேடுகள் தான் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் 2024 மக்களவைத் தேர்தலிலும் அரங்கேறின. வாக்காளர் பட்டியல் முதல் தேர்தல் நடத்தும் இயந்திரங்கள் வரை அனைத்தையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகிறது” என ராகுல் காந்தி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version