குழந்தை பிறந்தவுடன் அதன் முதல் அழுகுரல் கேட்கும் அந்த நொடிகள் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஆனால், அந்த நேரத்தில் குழந்தை இளஞ்சிவப்பு நிறத்திற்குப் பதிலாக நீல நிறமாகத் தென்பட்டால் அது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும். இது ‘புளூ பேபி சிண்ட்ரோம்’ (Blue Baby Syndrome) எனப்படும் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது குறித்து இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் வழங்கும் முக்கிய தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

புளூ பேபி சிண்ட்ரோம் என்றால் என்ன? குழந்தையின் இரத்தம் போதுமான அளவு ஆக்சிஜனைப் பெறாதபோது தோல், உதடுகள் அல்லது நகங்கள் நீல நிறமாக மாறுவதையே இந்தப் பாதிப்பு குறிக்கிறது. இது பெரும்பாலும் பிறவி இதயக் குறைபாடுகளால் (Congenital heart disease) ஏற்படுகிறது. இந்தியாவில் 1,000 குழந்தைகளில் சுமார் 8 முதல் 10 குழந்தைகளுக்கு இத்தகைய இதயக் குறைபாடுகள் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எச்சரிக்கை அறிகுறிகள்: உதடுகள், நாக்கு அல்லது விரல் நகங்கள் நீல நிறமாகத் தெரிதல்.

வேகமாக அல்லது சிரமப்பட்டு சுவாசித்தல்.

பால் குடிப்பதில் சிரமம் அல்லது பால் குடிக்கும்போது அதிகமாக வேர்த்தல்.

உடல் எடை குறைதல்.

எப்போதும் சோர்வாக அல்லது அதிக தூக்கத்திலேயே இருத்தல்.

திடீரென உடல் நீல நிறமாகி, மூச்சு விடத் திணறி உடல் தளர்ந்து போதல் (இது மிக அவசரமான மருத்துவச் சூழல்).

குழந்தை பிறந்த சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டக்கூடாது.

மருத்துவத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியால், இன்று இப்பிரச்சினைக்குச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருந்துகள், ‘கேதெட்டரைசேஷன்’ (Catheterisation) அல்லது அறுவை சிகிச்சை மூலம் இதைக் குணப்படுத்த முடியும். தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மற்ற குழந்தைகளைப் போல ஆரோக்கியமான மற்றும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். எனவே, குழந்தை பிறந்த பிறகு அதன் நிறம் மற்றும் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version