மூளையை தின்னும் அமீபாவின் பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செப்ஹாலிடிஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கோழிக்கோடு, மூணாறு பகுதிகளில் இருக்கும் தூய்மையற்ற நீர்நிலைகளில் குளித்த சிறுமிக்கு அமீபா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளைக்குள் நுழையும் அமீபா மெல்ல மெல்ல திசுக்களை அழிக்கும். இதனால் தலைவலி, காய்ச்சல், வாய்ந்தி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர் கோமாவுக்கு கூட செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவரின் உடலில் அமீபா செல்லும்போது அது திசுக்களை உண்டு வளர்வதுடன், கழுத்தை இறுக்கும் என்றும் அதனால் பாதிக்கப்பட்ட நபர் கவனத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அமீபா ஒருவரது உடலுக்குள் நுழைந்த 18 நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூளையை உண்ணும் அமீபாவின் பாதிப்பு அரிதானது என கூறும் மருத்துவர்கள், இந்த பாதிப்பை சோதனை மூலம் கண்டறிவதும், உரிய சிகிச்சை அளிப்பதும் கடினமானது என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தொற்று நோய் இல்லை என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.   

Share.
Leave A Reply

Exit mobile version