நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.

இந்தநிலையில், மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் தயிர், சர்க்கரையை ஜனாதிபதி முர்மு நிர்மலா சீதாராமனுக்கு ஊட்டினார். இந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுகிறது தெரியுமா? இந்திய கலாச்சாரத்தின்படி, ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன் தயிர், சர்க்கரை சாப்பிட்டால் அக்காரியம் நல்லப்படியாக முடிவடையும் என நம்பப்படுகிறது. இந்த பட்ஜெட் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மென்மேலும் உயரவேண்டும் என எண்ணி இந்த நிகழ்வு நடந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டுக்கான ஒப்புதலைப் பெறும் வகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், நிதியமைச்சக அதிகாரிகள் உடன் இருந்தனர். நிதியமைச்சக செயலாளர்களுடன் ஜனாதிபதி மாளிகையில், முர்முவை சந்தித்த நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் சுருக்கமாக விளக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் உரையாற்ற உள்ளார். இதில், தொழில் துறையினருக்கான சலுகைகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்ட அறிவிப்புகளும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version