வட இந்தியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காக்களில் ஒன்று ரந்தம்பூர் தேசிய பூங்கா. ராஜஸ்தான் மாநிலம் சவார் மாதோபூர் மாவட்டத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த பூங்கா. ரந்தம்பூர் காடானது 1,334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலானது. இங்கு அதிகளவு ராயல் பெங்கால் புலிகள் வசித்து வருவது தனிச்சிறப்பு. சுற்றுலாப் பயணிகளை காடுகளுக்குள் சஃபாரி அழைத்துச் செல்வர் வனத்துறையினர்.
இயற்கையின் அழகில் புலிகளை நேரடியாக பார்கும் அனுபவத்தை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் பூங்காவில் இருந்த புலிக் குட்டிகளை தொட்டு பார்த்து அவைகளுடன் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
ஒரு தேசியப் பூங்காவில் பயணிகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது இந்த சம்பவம். அதேப் போல புலிகளின் பாதுகாப்பும் இதில் கேள்விக்குறியானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளான நிலையில், அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்..