மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை 2 கட்டங்களாக மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வருகிற 2027ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் கெசட்டில் அரசு அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. அதன்படி, 2027-ம் ஆண்டில் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, வீடு குறித்த கணக்கெடுப்பு வருகிற 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்படுகிறது. இதையடுத்து மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடத்தப்படும். இதில் சாதி குறித்த விவரமும் சேகரிக்கப்படும்.
முதல்முறையாக செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இணையதள வசதி இல்லாத பகுதிகளில் மட்டும் காகிதத்தில் தகவல் பெறப்படும்.
இவ்வாறு அந்தப் பதிலில் நித்யானந்த ராய் குறிப்பிட்டுள்ளார்.
