சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து இரண்டு நீதிபதிகள் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு புதிய நீதிபதிகள் சென்னைக்கு வர உள்ள நிலையில், தலைமை நீதிபதி அளவிலும் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடமாற்றங்கள்
உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டுள்ள பரிந்துரையின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி பட்டூ தேவனாந்த், ஆந்திரா மாநில உயர் நீதிமன்றத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
புதிய நீதிபதிகள் நியமனம்
கர்நாடகா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களது நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க உள்ளனர்.
தலைமை நீதிபதிகள் மாற்றம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. அதேபோல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றதால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. தற்போது இரண்டு நீதிபதிகள் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்களுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆகக் குறைந்துள்ளது.
இந்த மாற்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.