புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற இன்று (மார்ச் 26) கடைசி நாளாக இருந்தது. மாலை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் திமுக இடையே நிலவி வந்த தொகுதிப் பூசல் முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவைத் திரும்பப் பெறவில்லை.
உழவர்கரை மட்டுமன்றி, தட்டாஞ்சாவடி, நெல்லித்தோப்பு, காலாப்பட்டு மற்றும் ராஜ் பவன் ஆகிய தொகுதிகளிலும் இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறாததால், மொத்தம் 5 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விசிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் இந்த பிடிவாதம் கூட்டணியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் இணக்கமான கூட்டணியாகச் செயல்படும் இந்த இரு கட்சிகளும், புதுச்சேரியில் மட்டும் தனித்தனிப் பாதையில் பயணிப்பது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியாகத் தேர்தலைச் சந்திக்கின்றன. தொடக்கத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாகக் காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், திமுக கூட்டணிக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தத் தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தட்டாஞ்சாவடி மற்றும் உழவர்கரை ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.
காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளையும் தாண்டி, கூடுதலாக 6 தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. திமுக 13 தொகுதிகளில் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரஸ் 22 தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இதில் நெல்லித் தோப்பு தொகுதியை மட்டும் வாபஸ் பெற காங்கிரஸ் சம்மதித்துள்ளது. மற்ற 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவைத் திரும்பப் பெறப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
