காற்றுத் தரச் சுட்டெண் ( Air quality index – AQI ) என்பது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான சுத்தமான மற்றும் தரமான காற்று உள்ளதா என்பதை சரியாக குறிக்கும் அளவீடு ஆகும். இந்த அளவீடு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும் கணக்கெடுக்கப்படும்.
தலைநகர் டெல்லியில் கடந்த 10 வருடங்களாகவே காற்று மாசு இருந்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கடந்த ஏழு நாட்களாக பாரத தலைநகர் டெல்லியில் காற்றுத் தரச் சுட்டெண் அளவு 300க்கு மேல் இருந்து வருகிறது. இன்று அளவுக்கு அதிகமாக அந்த அளவு 400 ஐ தொட்டு விட்டது.
டிடியு, புராரி, சாந்தினி சௌக், ஆனந்த் விஹார், முண்ட்கா, ஓக்லா, பவானா, வஜீர்பூர் என 20க்கும் மேற்பட்ட நிலையங்களில் அந்த அளவானது இன்று 400க்கு மேல் உள்ளது.
காற்றத் தரச் சுட்டெண் அளவானது :
0 முதல் 50 வரையில் இருந்தால் நல்லது.
51 முதல் 100 வரை திருப்திகரமானது.
101 முதல் 200 வரை மிதமானது.
201 முதல் 300 வரை மோசம்.
301 முதல் 400 வரை மிகவும் மோசம்.
401 முதல் 500 வரை கடுமையானது.
பாரத தலைநகர் டெல்லியில் இருக்கும் 40 நிலையங்களில் கிட்டத்தட்ட 21 நிலையங்களின் காற்று தரம் மிக மோசத்தைக் கடந்து தற்பொழுது கடுமையான நிலையை அடைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்துக் கொண்டு போனால் நிச்சயமாக இந்தக் காற்றை சுவாசிக்கும் அனைவரது உடல் ஆரோக்கியத்தில் முன்பை காட்டிலும் மிக கடுமையான அளவில் பாதிப்பு ஏற்படும். இதனால் டெல்லி நகர மக்கள் அனைவரும் கடும் வேதனையில் உள்ளனர்.
பாரத தலைநகர் டெல்லியின் காற்று தரம் மீண்டும் பழையபடி சுத்தமாக மாறும் என்று நம்புவோம்.
