டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடால் ஏழைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லி காற்று மாசுபாடு குறித்த வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் எம் பஞ்சௌலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, அமிகஸ் கியூரியான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங் ஆஜரானார். அப்போது வாதிட்ட அவர், மாசுபாடு காரணமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் திறந்தவெளி விளையாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக தெளிவான உத்தரவுகள் இருந்தபோதிலும், சில பள்ளிகள் இந்த நடவடிக்கைகளை தொடர வழிகளை கண்டறிந்துள்ளன என்று கூறினார். மேலும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் உள்ளன, ஆனால் அதிகாரிகள் அவற்றை மோசமாக செயல்படுத்துவதே பிரச்சினை என்று கூறினார்.
மேலும், அபராஜிதா சிங் தெரிவித்ததாவது, நீதிமன்றம் நேரடியாக உத்தரவு வழங்கினால்தான் அதிகாரிகள் நடைமுறையில் உள்ள விதிகளை கடைப்பிடிக்கிறார்கள். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “இந்த வழக்கு புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படும். மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்; கட்டாயமாக நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்” என்று கூறினார்.
மேலும், “பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்கான தீர்வுகள் என்ன, என்னென்ன வழிமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் பார்க்க வேண்டும். அவற்றிற்கான உத்தரவுகளையே நாங்கள் வழங்குவோம். நாங்கள் உத்தரவு பிறப்பித்தால், அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர்கள் கூறக்கூடும் அல்லது நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடும். இந்த இரண்டு சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. சில உத்தரவுகள் கட்டாயமாக அமல்படுத்தப்படலாம். அத்தகைய சூழ்நிலைகளுக்கு மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். அவர்களின் வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்கள் தேவைப்படும். ஆனால் பெரிய நகரங்களில் மக்கள் ஏற்கனவே பின்பற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவது எளிதல்ல என்று தலைமை நீதிபதி கூறினார்.
இந்த உத்தரவுகள் ஏழை மக்கள்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட அமிக்கஸ் க்யூரியே, இத்தகைய நடவடிக்கைகளால் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான் என்று தெரிவித்தார். குறிப்பாக, GRAP-4 (Graded Response Action Plan) கட்டுப்பாடுகள் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான மனுவை மேற்கோள் காட்டி மற்றொரு வழக்கறிஞர் வாதிட்டதாவது, முன்பே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் இருந்தபோதிலும் பள்ளிகள் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றன என்றார்.
இதுகுறித்து அமிக்கஸ் க்யூரியேவும், “இந்த நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும், பள்ளிகள் இவ்விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகளை கண்டுபிடித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. CAQM (காற்றுத் தர மேலாண்மை ஆணையம்) மீண்டும் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி வருகிறது” என்று தெரிவித்தார்.
