இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தகவல்படி, முதல் நிலநடுக்கம் நேற்று (மார்ச் 7) நள்ளிரவு 11:55 மணியளவில் மேற்கு காமெங் பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானது.

இதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 8) அதிகாலை 1:10 மணியளவில் மீண்டும் அதே பகுதியில் 2.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது. சில மணி நேரங்களிலேயே, இன்று அதிகாலை அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் (Bichom) பகுதியில் 2.8 ரிக்டர் அளவில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் குறைந்த ஆழத்திலேயே (சுமார் 5 கி.மீ முதல் 10 கி.மீ வரை) ஏற்பட்டுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இமயமலைத் தொடரை ஒட்டியுள்ள அருணாச்சல பிரதேசம், நில அதிர்வு மண்டலம் 5-ல் (Seismic Zone V) வருவதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version