எபோலா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நேரடியாகவோ அல்லது பிற நாடுகள் வழியாகவோ டெல்லி வரும் அனைத்து பயணிகளுக்கும் தீவிர தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் மருத்துவக் கண்காணிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், இன்று டெல்லி விமான நிலையத்தில் இந்த அவசர வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. விமான நிலைய சுகாதாரப் பிரிவு இதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எபோலா அறிகுறிகளான காய்ச்சல், உடல் பலவீனம், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடலில் காரணமின்றி ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவை இருந்தால், பயணிகள் குடியேற்ற (இம்மிகிரேஷன்) பிரிவுக்குச் செல்லும் முன்பே விமான நிலைய அதிகாரிகளிடம் தங்களைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், எபோலா பாதிப்பு உள்ள நாடுகளுக்குச் சென்று, நோயாளிகளின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களும் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விமானம் இறங்கிய பிறகு 21 நாட்களுக்குள் மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தை அணுகி, தங்களது பயண வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் சாத்தியமான பரவலை முழுமையாகத் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை தெளிவுபடுத்தியுள்ளபடி, தற்போது இந்தியாவில் எபோலா வைரஸ் பாதிப்புகள் எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எபோலா, கொரோனா வைரஸ் போன்று காற்று மூலம் பரவும் நோய் அல்ல. இது நேரடி உடல் தொடர்பு, தொற்று உள்ளவரின் இரத்தம், உடல் திரவங்கள், உடைகள் அல்லது பிற பொருட்களின் மூலமே பரவும் என்பதால், முறையான விமான நிலையக் கண்காணிப்பு மற்றும் தனிநபர் விழிப்புணர்வு மூலம் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எபோலா வைரஸ் முதன்முதலில் 1976-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது. இது ஹெமரேஜிக் ஃபீவர் எனப்படும் கடுமையான இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும். சராசரியாக 25 முதல் 90 சதவீதம் வரை மரண விகிதம் கொண்ட இந்த நோய், உரிய சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தக்கூடியது. தற்போது ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் பதிவாகி வருவதால், உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மத்திய அரசு ஏற்கெனவே பல்வேறு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. சுகாதார அதிகாரிகள், “எச்சரிக்கையுடன் இருப்போம், ஆனால் பீதியடையத் தேவையில்லை” என்று வலியுறுத்தியுள்ளனர். பயணிகள் தங்களது உடல்நிலையை கவனித்து, சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version