மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர ராணுவ மோதல்கள் மற்றும் போர்ச் சூழல், இந்தியப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) எச்சரித்துள்ளது. “

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் போர் பதற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்” குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தப் போர் காரணமாக உலகளவில் சுமார் 88 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 24.64 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வறுமை விகிதம் 23.9 சதவீதத்திலிருந்து 24.2 சதவீதமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வறுமை அதிகரிப்பிற்கு மிக முக்கியக் காரணமாக எரிபொருள் விலை உயர்வு பார்க்கப்படுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், போரினால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, அது உள்நாட்டில் சரக்கு போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும். இது சாமானிய மக்களின் வாங்கும் சக்தியைப் பெருமளவு குறைக்கும். மேலும், இந்தியாவின் உர இறக்குமதியில் 45 சதவீதம் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தே வருவதால், காரிப் பருவ விவசாய உற்பத்தியும் பாதிக்கப்படலாம். இது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் என அஞ்சப்படுகிறது.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, மனித மேம்பாட்டுக் குறியீட்டிலும் (HDI) இந்தியா பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் சுமார் ஒரு கோடி இந்தியர்களிடமிருந்து வரும் பணவரவு (Remittances) குறைவது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைச் சிதைக்கக்கூடும். போர்க் காலம் நீடித்தால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்குச் சுமார் $299 பில்லியன் வரை ஒட்டுமொத்த இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ளவும், வறுமை அதிகரிப்பதைத் தடுக்கவும் இந்தியா தனது பொருளாதார வியூகங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version