ராகுல்காந்தி அளித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கர்நாடகாவில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஒரு வலிமையான ஆதாரத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.
ராகுல் காந்தி 6 மாத கால கடினமான முயற்சியின் மூலம் சேகரித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. மகாதேவபுரா தொகுதியில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பது குறித்த தரவுகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நிறைய இருக்கிறது” என அதில் பதிவிட்டுள்ளார்.