மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 185 வாக்குகளும் பதிவாகின. விவாதத்தின் போது பேசிய பிரதமர் மோடி, தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்று உறுதி அளித்ததுடன், திமுகவினரின் கருப்பு உடையைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார். ஒரு சுப காரியத்தைத் தொடங்கும் முன் திருஷ்டி கழிக்க ‘கருப்பு திலகம்’ இடுவது வழக்கம் என்றும், அந்த வகையில் திமுகவினர் இந்த மசோதாவிற்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்தக் கருத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று அவையில் மிக வலுவான பதிலடி கொடுத்தார். ஆளுங்கட்சியினர் பெண் சக்தியைப் பற்றிப் பேசினாலும், கருப்பு நிறம் கொண்ட பெண் தெய்வமான ‘காளி’யை மறந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். அநீதிக்கும் அராஜகத்திற்கும் எதிராகப் போராடும் காளி தேவி கருப்பு நிறத்தையே கொண்டவர் என்றும், தீய சக்திகளை அழிக்கும் அந்தத் தெய்வத்தின் அடையாளமாகவே தாங்கள் கருப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், கருப்பு என்பது வெறும் நிறமல்ல, அது அநீதிக்கு எதிரான போராட்டத்தின் வடிவம் என்பதை கனிமொழி தனது உரையில் வலியுறுத்தினார். ஈகோ மற்றும் அதிகார மமதையை அடக்கும் வலிமை கருப்பு நிறத்திற்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர், தென் மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக கடைசி வரை உறுதியுடன் போராடும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பிரதமரின் கிண்டலுக்கு ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியான காரணங்களை முன்வைத்து கனிமொழி அளித்த இந்தப் பதில் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
