நாடாளுமன்றத்தில் நேற்று தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் அறிமுக செய்யப்பட்டன. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், இது தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாகத் தாக்கினார். இந்தச் சட்டங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை விட, இந்தியாவின் தேர்தல் சமநிலையை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார்.
அரசியல் நோக்கங்களை அடைவதற்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒரு போர்வையாகப் பயன்படுத்துவதாகக் கூறினார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் அரசியல் குரலை பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“தேச விரோத” நடவடிக்கை என வர்ணித்ததை ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் எதிர்க்கும் என்றும், கட்சி ஆதாயத்திற்காக ஜனநாயகக் கட்டமைப்பை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
முதல் உண்மை என்னவென்றால், இது பெண்களுக்கான மசோதா அல்ல. இதற்கும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைக்கும் முயற்சி என்றும் அவர் சாடினார். குறிப்பாக, மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செய்த தென் மாநிலங்கள் இதன் மூலம் தண்டிக்கப்படுவதாக அவர் தனது கவலையைப் பதிவு செய்தார்.
பெண்கள் நமது தேசியக் கற்பனையிலும், தேசியப் பார்வையிலும் ஓர் மையச் சக்தியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த அறையில் உள்ள நம் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வில் உள்ள பெண்களிடமிருந்து நிறைய தாக்கத்தையும், பாடங்களையும், அறிவையும் பெற்றிருக்கிறோம். இந்த மசோதா, இந்தியப் பெண்களைப் பயன்படுத்தி, அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் ஒரு முயற்சியாகும்.
சாதி கணக்கெடுப்பு தொடங்கிவிட்டது என்கிறார் அமித் ஷா. வீடுகளுக்கு சாதி இல்லை என்று சாமர்த்தியமாகக் காட்டிக்கொள்ள முயன்று, அதை இரண்டு முறை திரும்பத் திரும்பச் சொன்னார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவத்திற்கு சாதி கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுமா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. இப்போதோ, அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவத்திற்கும் சாதி கணக்கெடுப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல முயற்சிக்கிறீர்கள்…
இந்திய சமூகம் தலித்துகளையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், அவர்களது பெண்களையும் நடத்திய விதம் ஒரு வரலாற்று உண்மை… இங்கு செய்ய முயற்சிப்பது சாதி கணக்கெடுப்பைத் தவிர்ப்பதாகும். இங்கே, இவர்கள் எனது இதர பிற்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு அதிகாரத்தையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்குவதைத் தவிர்த்து, அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த மசோதா பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பற்றியதை விட, தொகுதி மறுவரையறை மூலம் செய்யப்படும் அரசியல் சூழ்ச்சியைப் பற்றியதே அதிகம் என்று ராகுல் காந்தி வாதிட்டார். அவரைப் பொறுத்தவரை, முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது, ஆளும் பாஜகவுக்குப் பயனளிக்கும் வகையிலும், தற்போதுள்ள சமூக நீதிக் கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் வகையிலும் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் விளிம்புநிலைப் பிரிவினரின் அரசியல் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய ராகுல் காந்தி, தென் மாநில மக்கள் இது குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளித்தார். “தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது“ என்று கூறிய அவர், நாட்டின் பன்முகத்தன்மையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வில் சமத்துவத்தை நிலைநாட்ட சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்திய ராகுல், பாஜகவின் இந்தத் திட்டம் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என்றும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
