அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு, மேற்காசியப் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று தொடர்ந்து 5-வது நாளாக சரிவைச் சந்தித்தன.
காலை வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 916.96 புள்ளிகள் சரிந்து 75,474.43 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 331.62 புள்ளிகள் சரிந்து 76,059.77 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 102.15 புள்ளிகள் சரிந்து 23,767.45 புள்ளிகளாக நிலைபெற்றது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுப்பதிலும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டது சந்தையில் எதிரொலித்தது. தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,999.23 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
அமெரிக்கா தனது வர்த்தகக் கொள்கைகளில் கொண்டு வரவுள்ள புதிய வரி விதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள், சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கச் சந்தையுடன் நேரடித் தொடர்பு கொண்ட ஐடி மற்றும் உற்பத்தித்துறை நிறுவனங்களின் பங்குகள் இன்று பெரும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகின.
திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கும் போது உலகளாவிய சந்தைகளில் இருந்து வரும் புதிய அறிவிப்புகளைப் பொறுத்தே, சந்தையின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
