இந்த ஆண்டுத் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டாலும், முதலீட்டாளர்கள் வெள்ளியையும் பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த உலோகங்களுக்கு இணையாக, தற்போது சந்தையில் தாமிரத்தின் (Copper) விற்பனை சடுதியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் விநியோகக் கவலைகள் தீவிரமடைவதாலும், அமெரிக்காவிற்கு வெளியே தேவை அதிகரிப்பதாலும் தாமிரத்தின் விலை டன்னுக்கு $12,000ஐ நெருங்கி வருகிறது. 2025ஆம் ஆண்டில் இதுவரை தாமிரத்தின் விலை சுமார் 35% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாமிரத்தின் மதிப்பு உயர என்ன காரணம்..?

தாமிரத்தின் தேவை அதிகரிப்பதற்கும் அதன் மதிப்பு உயர்வதற்கும் முக்கியக் காரணம், அதன் பரந்த தொழில்துறை பயன்பாடு ஆகும். தாமிரம் அதிக மின் கடத்துத்திறன் கொண்டிருப்பதால், இது மின் கட்டங்கள், தரவு மையங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் சுத்தமான எரிசக்தி அமைப்புகளுக்கு இன்றியமையாத பொருளாக உள்ளது. அரசாங்கங்களும் நிறுவனங்களும் மின் கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்காக பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன.

மேலும், காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களும் மின்சாரத்தை திறம்பட கடத்துவதற்கு தாமிரத்தை அதிகம் நம்பியுள்ளன. இந்த நீண்டகால தேவைகள், தாமிரத்தை உலக சந்தையில் மிகவும் கவர்ச்சிகரமான தொழில்துறை உலோகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

AI-இன் ஆதிக்கம் :

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகரித்து வரும் முதலீடுகள், தாமிரத்தின் மீதான முதலீட்டாளர்களின் தேவையை மேலும் உயர்த்தியுள்ளது. ஆய்வாளர்கள் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு உள்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட முதலீட்டு உத்திகளின் ஒரு பகுதியாக தாமிரம் மாறிவிட்டது.

ராய்ட்டர்ஸ் நடத்திய கணக்கெடுப்பின்படி, உலக தாமிர சந்தை 2025ஆம் ஆண்டில் சுமார் 124,000 டன் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2026ஆம் ஆண்டில் 150,000 டன்களாக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேசியாவில் உள்ள ஒரு முக்கியச் சுரங்கத்தில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்து போன்ற சுரங்க இடையூறுகள், இந்த அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன.

சர்வதேச வர்த்தக கொள்கைகளும் தாமிர விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்திற்கு ஆகஸ்ட் 1 அன்று அமலுக்கு வந்த 50% இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த உலோகத்திற்கான அமெரிக்க வரிகள் இன்னும் மதிப்பாய்வில் உள்ளன. வரவிருக்கும் நாட்களில் வர்த்தகக் கொள்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது உலகளாவிய வர்த்தக ஓட்டங்கள் மற்றும் விலைகளை மேலும் பாதிக்கலாம்.

இருப்பினும், தாமிரத்தின் தேவை கணிப்புகள் நிலையானதாகவே உள்ளன. மெக்குவாரி நிறுவனத்தின் எதிர்பார்ப்பின்படி, 2025ஆம் ஆண்டில் உலகளாவிய தாமிர தேவை 2.7% அதிகரித்து 27 மில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version