மேடையில் முஸ்லிம் டாக்டர் ஒருவரின் ஹிஜாபை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விலக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் மனநலம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (டிச. 15) அரசு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களும், பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டிருந்தனர். ஒலிப்பெருக்கியில் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும், குறிப்பிட்ட நபர்கள் வந்து தங்களது பணி நியமன ஆணையை பெற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பெண் ஆயுஷ் மருத்துவரான நுஸ்ரத் பர்வீனும், தனது பணி நியமன ஆணையை பெற்றுக் கொள்வதற்காக மேடை ஏறினார். அவரிடம் பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர் நிதிஷ் குமார், அவரது முகத்தை மூடியிருந்த ஹிஜாபை சுட்டிக்காட்டி, “அது என்ன?” எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு ஹிஜாப் என நுஸ்ரத் கூறியதும், அதை விலக்குமாறு நிதிஷ் குமார் கூறினார். பின்னர், சில நொடிகளில் நுஸ்தரத்தின் ஹிஜாபை அவரே சட்டென விலக்கினார். இதனால் மருத்துவர் நுஸ்ரத் அதிர்ச்சியில் உறைந்தார்.
நிதிஷ்குமார் ஹிஜாபை விலக்கும் போது, துணை முதலமைச்சர் சாம்ராட் செளத்ரி அதை தடுக்க முயன்றார். சிலர் அதை பார்த்து சிரித்தபடி நின்று கொண்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
