இந்திய மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக முட்டை விளங்கி வருகிறது. மலிவான விலையில் கிடைக்கும் உயர்தர புரதச்சத்து நிறைந்த உணவாக முட்டை கருதப்படும் வேளையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான சில தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தின.

முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப் பொருட்கள் இருப்பதாக பரவிய செய்திகளைத் தொடர்ந்து, மத்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (FSSAI) நேரடியாகக் களமிறங்கி விளக்கமளித்துள்ளதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு தழுவிய சோதனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சையின் பின்னணி: கர்நாடகாவைச் சேர்ந்த ‘எக்கோஸ்’ (Eggoz) போன்ற பிரபல பிராண்டட் முட்டை விற்பனை நிறுவனங்களின் தயாரிப்புகளில், ‘நைட்ரோபுரான்’ (Nitrofuran) எனப்படும் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தின் எச்சங்கள் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை இணையத்தில் வெளியானது.

இது புற்றுநோயை உருவாக்கக்கூடிய வேதிப்பொருள் என்பதால், முட்டை பிரியர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியது. குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவி, முட்டை விற்பனையிலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.

FSSAI-யின் அதிரடி உத்தரவு மற்றும் நாடு தழுவிய சோதனை: இந்தப் புகார்கள் எழுந்தவுடன் FSSAI நாடு முழுவதும் உள்ள தனது மண்டல அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. அதில்,

  • பெரிய நிறுவனங்களின் பிராண்டட் முட்டைகள் மட்டுமின்றி, சாதாரண கடைகளில் விற்கப்படும் சில்லறை முட்டைகளையும் மாதிரிகளாகச் சேகரிக்க உத்தரவிடப்பட்டது.
  • இந்த மாதிரிகளை நாடு முழுவதும் உள்ள 10 அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி, அதில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
  • கோழிப்பண்ணைகளில் இத்தகைய மருந்துகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

FSSAI அளித்துள்ள விளக்கம்: இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கத்தை அளித்துள்ள FSSAI, முட்டைகள் குறித்துப் பரப்பப்படும் செய்திகள் ‘தவறாக வழிநடத்தக்கூடியவை’ (Misleading) என்று கூறியுள்ளது. ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வக முடிவுகளை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவில் விற்கப்படும் முட்டைகளும் பாதுகாப்பற்றவை என்று கூறுவது அறிவியல் ரீதியாகத் தவறானது.

நைட்ரோபுரான் போன்ற மருந்துகள் இந்தியாவில் 2011-ம் ஆண்டே தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மிகவும் நவீனமான ஆய்வகக் கருவிகளால் கண்டறியப்படும் மிகக் குறைந்த அளவிலான (1.0 µg/kg) எச்சங்கள் என்பது நுகர்வோருக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் தரத்திற்கு இணையாக இருப்பதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மறுப்பு: குற்றச்சாட்டுக்கு உள்ளான ‘எக்கோஸ்’ நிறுவனம் இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளது. அதில், “தங்கள் நிறுவன முட்டைகளில் எந்தவிதமான நச்சுப் பொருட்களும் இல்லை என்றும், சமீபத்திய பரிசோதனை முடிவுகள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு என்பது மக்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரும் வரை பொதுமக்கள் பீதியடையாமல், முறையாகச் சமைத்த முட்டைகளை உண்பது பாதுகாப்பானது. அதே நேரத்தில், முட்டை வாங்கும் போது அதன் தரம் மற்றும் காலாவதி தேதியை சரிபார்த்து வாங்குவது அனைவரின் கடமையாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version