2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு பெண்கள் விடுதி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல், பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் ”SheMart” என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுய உதவிக் குழுக்கள் பயன்படும் வகையில் அவர்களது உற்பத்தி பொருட்களை விற்கலாம்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்: தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டமும், பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் சுற்றுச்சுழல் வளத்தையும் உலக மக்கள் அறிவார்கள் என கூறினார்.

இந்தியாவில் 3 இடங்களில் ஆயுர்வேத பயிற்சி மையம்: மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5 மண்டலங்களில் மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படுமென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டில் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத பயிற்சிமையம் நிறுவப்படும் எனவும் இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசின் முயற்சி: இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள்(PROI) இந்திய நிறுவனங்களின் பங்குகளில் போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டம்மூலம் நேரடியாக முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச அளவு 5% -ல் இருந்து 10% ஆக உயர்த்தப்படவுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம். நிறுவனங்களுக்கு புதிய மூலதனம் கிடைக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version