திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற உண்டியல் மோசடி விவகாரத்தில் தேவஸ்தான முன்னாள் ஊழியர் ஒருவர், தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் இடம் ‘பரகாமணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த துறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தவர் ரவிக்குமார். இவர் தேவஸ்தானத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். இவர் தனது பணிக்காலத்தில் சிறுக சிறுக உண்டியல் பணத்தை கையாடல் செய்து, சுமார் 100 கோடி ரூபாய் வரை திருடியதாக புகார்கள் எழுந்தன. பலத்த பாதுகாப்பு நிறைந்த கோவிலுக்குள் இவ்வளவு பெரிய தொகை எப்படி திருடப்பட்டிருக்கும் என்பது குறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் பிடியில் சிக்கிய ரவிக்குமார், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணீர் மல்க பேசியுள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். “திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில் 100 கோடி ரூபாயை நான் திருடியது உண்மை தான். செய்யக்கூடாத ஒரு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டேன். என் மனசாட்சி என்னை உறுத்தியதால், என் தவறை முழுமையாக உணர்ந்து கொண்டேன்,” என்று அந்த வீடியோவில் அவர் கதறி அழுதுள்ளார்.

தனது பாவத்திற்கு பரிகாரமாக, திருடிய பணத்தில் சேர்த்த சொத்துக்களை மீண்டும் கோவிலுக்கே ஒப்படைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். “சுவாமிக்கு சேர வேண்டிய பணத்தை, அவருக்கே முழு மனதுடன் எழுதி பதிவு செய்து கொடுத்துவிட்டேன். நான் திருடிய பணத்தின் மூலம் சம்பாதித்த சொத்துக்களில் 90 சதவீதத்தை திருப்பி கொடுத்துவிட்ட நிலையில், இனியும் என்னை துன்புறுத்த வேண்டாம்,” என்று அவர் அந்த வீடியோவில் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version