இந்தியாவின் வருங்கால எரிசக்தித் தேவைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி மிக முக்கியமானது என்பதால், இதில் உள்ள சவால்களைக் குறித்து மக்கள் பிரதிநிதிகள் ஆலோசிப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் இந்தியாவின் எரிசக்தித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற மரபுசார் எரிசக்திகள் மட்டுமின்றி, சூரிய ஒளி மற்றும் காற்று ஆலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவது குறித்தும் அரசு தெளிவான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரை காணவில்லை. சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செய்தி வருகின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருகிறது என கார்கே தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்குத் தடையில்லா மின்சாரம் மற்றும் எரிபொருள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, ஒருமித்த கருத்துடன் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதே கார்கேவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரம் வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
