இந்தியா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணுசக்தி மூலம் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதமான், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியாவின் ‘அணுசக்தி முக்கோண’ (Nuclear Triad) வலிமையில் கடல்வழித் தாக்குதல் திறனை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே சேவையில் உள்ள ஐஎன்எஸ் அரிகாந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாத் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையில் இணையும் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா அதனை மிகவும் ரகசியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒரு திட்டமாகவே  பராமரித்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ள உலகின் ஒரு சில முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாந்த் (INS Arihant), ஜூலை 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2016-ல் அமைதியான முறையில் கடற்படையில் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாட்டின் இரண்டாவது உள்நாட்டு SSBN ரக நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாத் (INS Arighaat) ஆகஸ்ட் 2024-ல் கடற்படையால் உள்வாங்கப்பட்டது. இங்கு SSBN என்பது ‘Ship Submersible Ballistic Nuclear’ என்பதைக் குறிக்கும்; அதாவது அணுசக்தியால் இயங்கும் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை இது குறிக்கிறது.

பல மாதங்களாக நடத்தப்பட்ட கடல்சார் சோதனைகளுக்குப் பிறகு (Sea trials), ஐஎன்எஸ் அரிதமன் இன்று முறைப்படி கடற்படையில் இணைக்கப்பட்டது. கேரளாவில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற இந்த ரகசியமான அர்ப்பணிப்பு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“அரிதமன் என்பது வெறும் சொல் அல்ல, அது ஒரு பேராற்றல்!” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். இந்தியா ஏற்கனவே நிலம் மற்றும் வான்வழி சார்ந்த அணு ஆயுதத் திறன்களை நிலைநிறுத்தியுள்ள நிலையில், தற்போது நீருக்கு அடியிலான தனது அணுசக்தித் தடுப்புத் திறனை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version