அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சுநேத்ரா பவார் மகாராஷ்டிராவின் அடுத்த துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், புதன்கிழமையில் (ஜன. 28) விமான விபத்தில் சிக்கி பலியானார். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமையில் நடைபெற்றது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை, பிளவுப்படுத்தி பின்னர் அதை தனதாக்கிக் கொண்டவர் அஜித் பவார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்குப் பிறகு சரத் பவார் கட்சியையும், தனது கட்சியையும் ஒன்றிணைக்க அஜித் பவார் முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலியாக உள்ள துணை முதல்வர் பதவிக்கு அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவாரை நியமிக்க தேசியவாத காங்கிரஸ் (NCP – அஜித் பவார் பிரிவு) ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்சிபி கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தட்கரே மற்றும் அமைச்சர் நர்ஹரி ஜிர்வாள் ஆகியோர், அஜித் பவாரின் இடத்தைச் சுநேத்ரா பவார் நிரப்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். “அஜித் தாதாவின்” அரசியல் பாரம்பரியத்தைத் தொடர ‘சுநேத்ரா வாஹினி’ (அண்ணி) அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று தொண்டர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுநேத்ரா பவார் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக (Rajya Sabha MP) உள்ளார். அவர் மாநில அமைச்சரவையில் சேர வேண்டுமானால், ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அஜித் பவாரின் மறைவால் காலியான பாராமதி சட்டப்பேரவைத் தொகுதியில் சுநேத்ரா பவார் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று பிரபுல் படேல் தலைமையிலான என்சிபி குழுவினர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் கட்சியின் எதிர்காலம் மற்றும் அஜித் பவார் கவனித்து வந்த நிதி உள்ளிட்ட முக்கியத் துறைகளைத் தக்கவைத்துக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

துணை முதல்வர் பதவி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அஜித் பவாரின் குடும்ப ஒப்புதலுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version