இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.
புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
இது இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களின் ஆற்றலால் நமது விண்வெளி திட்டங்கள் மிக வலிமையாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். புளூபேர்ட் செயற்கைகோளை ஏவிய LVM3 ராக்கெட்டின் நம்பகமான செயல்பாடுகள், ககன்யான் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, வணிக ரீதியிலான விண்வெளி சேவைகள் விரிவுபடுத்தவும், சர்வதேச கூட்டணிகளை விரிவுப்படுத்தவும் இது உதவுவதாக கூறினார்.
