கும்பமேளா புகைப்படங்களுடன் இணையத்தில் வைரலான மோனலிசா போஸ்லே என்ற பெண் தனது வசீகர கண்களால் பெரியளவில் பேசப்பட்டார். ஊடகங்களில் அவரது போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாக சினிமா வாய்ப்பு தேடி வந்தது. இந்நிலையில், கும்பமேளா புகழ் மோனாலிசா, தனது காதலன் ஃபர்மான் கானை கேரளா மாநிலம் அருமனூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.
எனினும், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால், திருவனந்தபுரம் அருகே உள்ள தம்பனூர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி அவர்கள் தஞ்சம் அடைந்தனர். “எனது தந்தை என்னை வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார், நான் எனது விருப்பப்படி ஃபர்மான் கானுடன் வாழ விரும்புகிறேன்” என்று காவல்துறையினரிடம் அவர் முறையிட்டார். மோனாலிசா 18 வயது பூர்த்தியானவர் என்பதால், சட்டப்படி அவர் தனது விருப்பமானவருடன் செல்லலாம் எனப் போலீஸார் அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து, கேரளாவின் பூவார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருமானூர் நயினார் கோவிலில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.
இந்நிலையில் மோனாலிசா – ஃபர்மான் கான் ஜோடி திருமணம் செய்து கொண்ட காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டதுதான் இப்போது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. கேரளக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

