மத்திய கிழக்கு ஆசியாவில், குறிப்பாக ஈரானில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவிற்குத் தேவையான எரிசக்தி இறக்குமதியில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எரிவாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவிற்கு வரும் எரிசக்தி விநியோகம் தற்போது ஏறத்தாழ முடங்கியுள்ளது. கடல்வழிப் பாதைகளில் நிலவும் பதற்றம் மற்றும் போர் அபாயம் காரணமாக சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போர்ச் சூழலுக்கு இடையிலும், பாதுகாப்புடன் கூடிய மிகக் குறைந்த அளவிலான கப்பல்கள் மூலம் அவ்வப்போது எல்பிஜி கொண்டு வரப்பட்டாலும், அது நாட்டின் ஒட்டுமொத்த தேவையையும் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. இந்தியாவின் தினசரி எரிசக்தித் தேவை மிக அதிகம் என்பதால், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை வரும் நாட்களில் பெரும் சவாலாக மாறும் என அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் புதிய கட்டுப்பாடுகள் நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகரப்பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள், ஒரு சிலிண்டர் பதிவு செய்த பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதுவரை இந்த கால அவகாசம் 21 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்த கால இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் வாங்கிய 45 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டருக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த நடவடிக்கை தேவையற்ற முன்பதிவுகளைக் குறைக்கவும், எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகள் அனைவரும் கட்டாயம் பயோமெட்ரிக் (Biometric) சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையை உறுதி செய்தால் மட்டுமே தொடர்ந்து மானியம் மற்றும் சிலிண்டர் சேவைகளைப் பெற முடியும்.
மற்றொரு முக்கிய மாற்றமாக, குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்குப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளில் ஏற்கனவே வைத்துள்ள எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக விநியோகஸ்தர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சிலிண்டர் பயன்பாட்டைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மே 1 முதல் அமலுக்கு வரும் இந்த விதிமுறைகளால், பொதுமக்கள் தங்கள் அடுத்த சிலிண்டர் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு எரிவாயு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
