செய்வினை நீங்க சொந்த பேரனையே நரபலி கொடுத்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜ் அடுத்த கரேலி பகுதியை சேர்ந்தவர் அஜய் சிங் – காமினி தம்பதி. இவர்களின் 17 வயது மகன் பியூஸ் கரேலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜய் சிங் இறந்ததாக கூறப்படுகிறது. தாய் காமினி அரவணைப்பில் பியூஸ் இருந்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பியூஸ் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு போனதாகவும் மாலை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த காமினி அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சூழலில் மிர்சாபூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருக்கும் ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ஓடையின் அருகே இருந்த தலையை மீட்டதுடன், ஆங்காங்கே இருந்த மற்ற உடல் பாகங்களையும் கைப்பற்றி விசாரித்துள்ளனர். அதில் கிடைத்த உடல் பாகங்கள் காணாமல் போன பள்ளி மாணவன் பியூஸ் என்பது தெரிய வந்தது.

இடையடுத்து காமினியிடம் தகவல் தெரிவித்த போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். அதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஸ்கூட்டியில் வந்த முதியவர் ஒருவர், சிறுவனின் தலையை ஓடையில் வீசி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த முதியவரை தேடி பிடித்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த முதியவர் சரண் சிங் என்பதும், இறந்த சிறுவனின் தாத்தா உறவு முறை என்பதும் தெரிய வந்தது. மேலும், தனது பேரனை தானே கொலை செய்ததாக சரண் சிங் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர் விசாரணையில், சரண் சிங்கின் மகள் 2023ம் ஆண்டு ஆற்றுப்பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அடுத்த ஆண்டே மகனும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த துர்மரணங்கள் குறித்து பயந்த சரண் சிங் மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார். அந்த மந்திரவாதி சரண் சிங் உறவினரான இறந்த பியூஸின் பாட்டி செய்வினை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் செய்வினை நீங்க நரபலி கொடுக்க வேண்டும் என்றும், அதனால் அனைத்து செய்வினையும் நீங்கி விடும் என்றும் அந்த மந்திரவாதி சொன்னதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய சரண் சிங், பள்ளிக்கு சென்ற பியூஸை தனது வீட்டுக்கு அழைத்து சென்று செங்கல்லால் அடித்து கொலை செய்து விட்டு, தலையை ரம்பத்தால் அறுத்து துண்டித்துள்ளார். பின்னர், உடல் பாகங்களை வெட்டி பையில் போட்டு எடுத்து சென்று ஓடை பகுதியில் வீசியதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு திடுக்கிட்ட போலீசார் சரண் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version