மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக வழக்கறிஞர் சைலேந்திரா திரிபாதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் “மாணவிகள், பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைவருக்கும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்க வேண்டும், அது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் உரிய நெறிமுறைகளை உருவாக்க கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சம்சத், “கேரளாவில் அரசு பல்கலைக்கழகங்களில் மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த முடிவானது பாலின சமத்துவ சமூகத்தை உறுதிப்படுத்தும் விஷயம் என்று கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பல தனியார் நிறுவனங்களில் கூட மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது என எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, “மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் கட்டாய மாதவிடாய் விடுமுறை என்பது சட்டமாக இயற்றப்பட்டாலோ, அல்லது வரையறுக்கப்பட்டாலோ அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களை பணி அமர்த்துவதற்கு யாரும் முன் வர மாட்டார்கள், பெண்கள் அரசு வேலைக்கு நீதித்துறை வேலைக்கோ செல்வது கூட தடைப்பட்டுவிடும். இது அவர்களின் Career-ஐ முழுமையாக முடக்குவதோடு நீங்கள் வீட்டிலேயே இருங்கள் என்று அவர்களை நிர்பந்திப்பது போல் ஆகிவிடும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அது போன்று ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும், பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி விடும். மேலும் மாதவிடாய் என்பது பெண்களுக்கு நடக்கும் மோசமான விஷயம் என்ற ஒரு மனநிலையையும் ஏற்படுத்தி விடும். எனவே இந்த மனுவை ஏற்க முடியாது, இந்த மனுவில் உள்ள கோரிக்கை தேவையில்லாத ஒரு அச்சத்தை உண்டாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என திட்டவட்டமாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version