இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா, டெல்லியில் இன்று (டிச. 9) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு திறன் ஆகியவற்றை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு துறையைப் பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சத்ய நாதெல்லா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாக அமைந்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் செய்ய உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய தகவல் மையம் அமைப்பதற்காக 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
