பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை வழங்கி எத்தியோப்பியா அரசு கௌரவித்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அரசு முறை பயணமாக ஜோர்டான் நாட்டிற்கு சென்றிருந்தார். அந்த பயணத்தை முடித்த அவர், அங்கிருந்து ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு சென்றுள்ளார். அங்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலியுடன் இரு நாடுகளுக்கிடையேயான உணவு, சுகாதாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா – எத்தியோப்பியா நாடுகளின் உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காகவும், தொலைநோக்கு பார்வைகொண்ட உலகளாவிய அரசியல்வாதியாக வலம் வருவதற்காகவும் அவருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான, ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ என்ற விருதை விருதை அளித்து சிறப்பித்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் அபி அகமது அலி.
உலகிலேயே முதன்முறையாக எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது கிடைத்திருப்பது குறித்து பேசிய அவர், இரு தரப்பு உறவுகளை பல ஆண்டுகளாக வளர்த்து வரும் இந்திய, எத்தியோப்பிய மக்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது பெற காரணமாக இருந்த 140 கோடி இந்தியர்களுக்கும் மோடி நன்றி தெரிவித்தார்.
எத்தியோப்பியாவின் உயரிய விருது பெற்றிருப்பது குறித்து மோடி தனது எக்ஸ் தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், “எத்தியோப்பியாவின் கௌரவ நிஷான்’ விருதை பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன். இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பல்வேறு நாடுகள் பிரதமர் மோடியை கௌரவித்து விருதுகள் வழங்கியுள்ள நிலையில், எத்தியோப்பியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற விருதானது அவருக்கு கிடைத்த 28-வது விருதாகும்.
