2025-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று(14.06.2025) வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டிற்கான நீட்-யூஜி தேர்வு கடந்த மே மாதம் 4-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இந்த தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை கடந்த 4-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக் குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்க கடந்த 5-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தது.
மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரீசிலிக்கப்பட்டு இறுதி விடைகுறிப்பும், அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் மற்றும் தகுதி பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் ரிசல்ட் எப்படி பார்ப்பது?
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதேப் போல, தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘NEET UG 2025 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், தேர்வு முடிவு பிடிஎப் வடிவில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்த உள்ளது. மீதமுள்ள 85 சதவிகித இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.