ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் மன உறுதியின் அடையாளம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா- ரஷ்யா கூட்டு ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களின் முக்கிய தூணாக உள்ளது. 2018ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாக லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் புதிய அலகு திறக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி 2021ல் அடிக்கல் நாட்டப்பட்டநிலையில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பிரமோஸ் ஏவகணை உற்பத்திக்கான புதிய அலகு இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை என்றார். நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். 40 மாதங்களில், இந்த திட்டம் நிறைவடைந்துள்ளதற்கு, உத்தரபிரதேச முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
புதிய உற்பத்தி அலகில் ஆண்டுக்கு 80 முதல் 100 பிரமோஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ், பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. மேலும் பல நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. இதையடுத்தே பிரமோஸ் ஏவுகணைகளை கூடுதலாக உற்பத்தி செய்ய புதிய அலகை மத்திய அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.