இந்திய ஓவியக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் ராஜா ரவிவர்மாவின் கைவண்ணத்தில் உருவான ஒரு அபூர்வ ஓவியம், இந்தியக் கலை வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மும்பையில் நடைபெற்ற கலைப் பொருட்கள் ஏலத்தில், ரவிவர்மாவின் ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா’ என்ற புகழ்பெற்ற ஓவியம் ரூ. 167.20 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதன் மூலம், இந்திய ஓவியம் ஒன்று ஈட்டிய மிக உயர்ந்த ஏலத் தொகை இது என்ற வரலாற்றுச் சாதனையை இப்படைப்பு நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு எம்.எப்.ஹுசைன் அவர்களின் ஓவியம் ரூ. 118 கோடிக்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ரவிவர்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது.

ஓவியத்தின் சிறப்பம்சங்கள்: 

1890-களில் வரையப்பட்ட இந்த ஓவியம், புராணக் கதையைத் தத்ரூபமாக நம் கண்முன் நிறுத்துகிறது. யசோதா பசுவிடம் பால் கறக்கும் காட்சியும், பின்னால் இருந்து குட்டி கிருஷ்ணர் ஒரு கோப்பையை எடுக்க முயற்சிப்பதும் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தாய்மையின் புனிதத்தையும், கிருஷ்ணரின் குறும்புத்தனத்தையும் இந்த ஓவியம் மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியத்தைச் சீரம் நிறுவனத்தின் (Serum Institute of India) நிர்வாக இயக்குனர் அதார் பூனாவாலா ஏலத்தில் எடுத்துள்ளார். ஆரம்பத்தில் இந்த ஓவியம் ரூ. 120 கோடி வரை மட்டுமே ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடுமையான போட்டிக்கு இடையே இந்த இமாலயத் தொகையை எட்டியுள்ளது.

“இத்தகைய காலத்தால் அழியாத பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ஒரு பெருமை” என அதார் பூனாவாலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version