காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பே, கடந்த வாரம் மேலூர் தொகுதியில் உள்ளூர்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வெளியூர்க்காரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. இதுமட்டுமல்லாமல், மேலூர் தொகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன் என்பவரும், சிவகங்கை அருகே பச்சேரியைச் சேர்ந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் உட்பட சிலர் வேட்பாளராக கடும் போட்டியில் உள்ளதால், பெயர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதில் சி.ஆர்.சுந்தர்ராஜன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்பி கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர் மூலம் சிவகங்கை தொகுதி வேட்பாளராக முயற்சி செய்தார்.
அத்தொகுதியை திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸுக்கு ஒதுக்கியதால் இவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தில் கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரி நடத்துவதால் மேலூர் தொகுதியை குறிவைத்தார். இதில் கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம் ஆகியோர் மூலம் டெல்லி தலைமையிடம் காய் நகர்த்தி வந்தனர்.
இந்தநிலையில், மேலூரில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

