இந்தியா – பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக போர் பதற்றம் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் வான்வழி தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் போன்றவை நடந்து வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டிய தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கி நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றுகாலை (10/5/02025) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசும்போது, வேண்டும் என்றே ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தான் நடந்து வருவதாக பலமுறை தான் கூறியுள்ளதாக தெரிவித்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல்களையும், அவதூறுகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியா தரப்பில் பொறுப்புடனும், சர்வதேச சமூகத்திற்கு பதிலளிக்கும் வகையிலும் எதிர்வினை நடத்தப்படுவதாக அழுத்தம் திருத்தமாக கூறினார்.
பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே பாகிஸ்தானின் செயல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் இந்தியாவை கொந்தளிக்கும் செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரேஷி, இந்தியாவின் மேற்கு எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவின் ராணுவ தளங்களை குறிவைத்து நீண்டதூர ஏவுகணைகள், ட்ரோன்கள், சுற்றித்திரியும் வெடிமருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தியதாக கூறினார். உதம்பூர், பூஞ்ச், பதான்கோட், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் உள்ள உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்றார். அதிகாலை 1.40 மணியளவில் பஞ்சாப்பின் விமான தளத்தை குறிவைத்து அதிவேக ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியது. அதனருகே இருந்த சுகாதார நிலையம், பள்ளிக்கூடம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது என்றார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங்க பேசுகையில், பொதுமக்கள் நீங்கலாக பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது மட்டும் இந்தியா உடனடியாக துல்லியமான விரைவான பதில் தாக்குதலை நடத்தியது என்றார். நமது s-400 ரக அமைப்பை தாக்கியதாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை தாக்கி அழித்ததாகவும் தவறான பொய்யான பிரச்சாரங்களை பாகிஸ்தான் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வண்ணம் இருக்கும் நிலையில், இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது என்ற ஏக்கம் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே எழுந்துள்ளது.