ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்…
தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது….
இனி எந்தவொரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும்…
அணு ஆயுத மிரட்டலைக் கண்டு இந்தியா ஒருபோதும் அஞ்சாது…
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளநிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதன் விரிவான தகவல்களை பார்ப்போம்..
போரில் ஈடுபட்ட இந்தியாவின் முப்படைகளுக்கும், உளவுத்துறை அமைப்புகளுக்கும் ஒரு சல்யூட் என்று மோடி குறிப்பிட்டார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரம், துணிச்சல் நமக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்றார். ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதல் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார். பஹல்காமில் மகள்கள் முன் தந்தைகளும், மனைவி முன் கணவர்களும் கொல்லப்பட்டனர் என்று மோடி தெரிவித்தார். இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நமது படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது என்றார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நமது படையினர் தக்க பதிலடியை கொடுத்தனர் என்று மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த பதில் நடவடிக்கையை பயங்கரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரணமான துணிச்சலை வெளிப்படுத்தினர். நாம் நடத்திய ஒரே தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒரே தாக்குதலில் பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மோடி கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தலைமையிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன என்றார். நமது கோயில்கள், குருத்வாராக்கள், மசூதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது என்று மோடி கூறினார். பயங்கரவாதிகளின் மூளைகளாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவினர் என்று குறிப்பிட்ட மோடி, பாகிஸ்தானின் ட்ரோன்களை சீட்டுக்கட்டுக்களை போல இந்திய பாதுகாப்புப்படை வீழ்த்தியது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும் என்று மோடி உறுதி தெரிவித்தார்.
இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி ஏவுகணைகளை, ட்ரோன்களை ஏவ முடியாத நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது என்று அவர் கூறினார். துல்லிய தாக்குதல்களை நமது ஏவுகணைகள் நடத்தியதாக குறிப்பிட்ட மோடி, இந்தியாவின் ஏவுகணைகள் பாகிஸ்தான் கடும் சேதத்தை ஏற்படுத்தியது என்றார். விமானப்படையினர், கடற்படையினர், ராணுவத்தினர், எல்லை பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானின் பகவல்பூர், முரிட்கே பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக செயல்படுகின்றன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். இந்தியா தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது என்றார். அந்நாட்டின் டிஜிஎம்ஓ எனப்படும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி இந்தியாவிடம் தொடர்பு கொண்டு கெஞ்சியதாக மோடி கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளன, முடிவுக்கு வரவில்லை என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அணுஆயுத மிரட்டல்களை கண்டு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை உலகிற்கே ஆபத்தானது என்று அவர் எடுத்துரைத்தார். இனி இந்தியாவிற்க எதிராக தாக்குதல் நடத்த முயன்றால் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் என்று பிரதமர் எச்சரித்தார்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களால் நமது ராணுவம் தாக்குதலை நடத்தி உள்ளது என்று மோடி அழுத்தந்திருத்தமாக கூறினார். நவயுக போர் முறைகளில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளோம் என்றார். இது போருக்கான யுகமும் இல்லை, பயங்கரவாத்திற்கான யுகமும் இல்லை.. என்று குறிப்பிட்ட மோடி, .ஆனால் பாகிஸ்தான் அரசும், பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர் என்றார். பயங்கரவாதத்தை இந்தியா சிறிதளவும் சகித்துக் கொள்ளாது என்றார். இனி இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு பயங்கரவாத செயலும் போராகவே கருதப்படும் என்று தெளிவுபட அவர் எடுத்துரைத்தார்.
தீவிரவாதமும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடைபெறாது என்றும் தீவிரவாதமும் வர்த்தகமும் ஒரே சமயத்தில் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தண்ணீரும், ரத்தமும் ஒரே சமயத்தில் ஓட முடியாது என்று திட்டவட்டமாக பிரதமர் பேசி உள்ளார்.