திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்தமாதம் 24-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நேற்று மாலை திருமலை அன்னமய பவனில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில், கோயில் கைங்கர்யங்கள், வாகன சேவைகள், என்ஜினீயரிங் பணிகள், விடுதி வசதிகள், கல்யாணக் கட்டா, அன்னப்பிரசாதம், தூய்மைப்பணி, தோட்டக்கலைப்பிரிவு அலங்காரங்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், காவல் உதவி மையங்கள், பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், தேவஸ்தானம் மற்றும் அரசு போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, ஆட்சியர் வெங்கடேஸ்வர், போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.